நடிகர் சிவாஜி கணேசன் குறித்து மருது மோகன் என்பவர் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(18.12.2022) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா 'சிவாஜி கணேசன்' புத்தகத்தை வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முத்துலிங்கம், "ஒரு நடிகரைப் பற்றி இவ்வளவு ஆய்வு செய்து 1600 பக்கங்களில் ஒரு புத்தகத்தை எழுதியவர் இந்தியத் துணைக் கண்டத்தில் உலக வரலாற்றில் எவரும் கிடையாது மருது மோகன் மட்டும்தான். இந்த விழாவிற்கு இளையராஜாவை அழைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார் மருது மோகன். அதற்காக மூன்று மாதம் காத்திருந்து இளையராஜாவிடம் தேதியைப் பெற்றிருக்கிறார்.
சிவாஜி பற்றி எல்லாருக்கும் தெரியும். தமிழ் சிறந்த மொழி என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்றால் சிவாஜி படத்தைத் திரையிட்டுக் காண்பித்தால் போதும். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குக் கிடைத்த பெருமை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. மத்திய அரசே, அதாவது மோடியே முன்வந்து மாநிலங்களவை உறுப்பினராகச் சேர்த்திருக்கிறார். இதை விட வேறு என்ன சிறப்பு வேண்டும். இதற்காகவே மோடி அவர்களை நான் பாராட்டுகிறேன். மத்திய அரசையும் போற்றுகிறேன்.
அதே நேரத்தில் மொழிக் கொள்கை என்று வரும்போது, என்னதான் செய்தாலும் திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்றிருக்கிற காலம் வரையிலும் தாமரை கட்சி தமிழ்நாட்டில் தலை நிமிர முடியாது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தை வழங்கியவர் கலைஞர்தான்." என்றார். மேலும் தொடர்ந்து இளையராஜாவைப் பற்றிப் புகழ்ந்து தள்ளினார் கவிஞர் முத்துலிங்கம்.