பாகுபலி-2, நடிகையர் திலகம் போன்ற ஆல் இந்தியா, சௌத் இந்தியா ஹிட் படங்களிலெல்லாம் நமக்கு முதலில் தெரிபவர்கள் பிரபாஸ், அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் என நடிகர்கள்தான்... அதற்கு அடுத்து இயக்குனர்கள். அந்தப் படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் நம்மை மிரட்டியவை, மனதை மயக்கியவை. அத்தகைய இசையில் இந்த சென்னைக்காரரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவரிடம் பேசலாம் என அழைக்கும்போதெல்லாம் 'பிஸி டோன்' ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மொழியில் வருகிறது. ஆம், தென்னிந்தியா முழுவதும் பறந்து பறந்து வேலை செய்கிறார் அருள்தேவ். மரகதமணி, வித்யாசாகர், மிக்கி ஜே மேயர் என பல இசையமைப்பாளர்களின் ஃபேவரிட் கீ-போர்ட் பிளேயர், ப்ரோக்ராமர் என எப்பொழுதும் பரபரப்பாக இருக்கிறார், பல முக்கிய படங்களில் வேலை செய்கிறார், ஆனால் வெளியில் தெரியாமல் அமைதியாக இருக்கிறார்.
'மோகினி' படத்தில் உங்கள் பங்கு?
முதலில் அண்ணாமலை பிக்சர்ஸ் கணேஷ் சார்தான் பேசினார், 'இது மாதிரி மாதேஷ் சார் படம் இருக்கு, த்ரிஷா நடிக்கிறாங்க'னு. மாதேஷ் சார் என்றதும் எனக்கு சந்தோஷம், ஏற்கனவே 'மதுர' படத்துல என் குருநாதர் கூட இருந்தப்போ அவர் கூட வேலை பாத்துருக்கேன். இப்படி எல்லோரும் நம்ம மேல அக்கறை உள்ளவர்களா அமைந்தது இந்தப் படம். இருந்தாலும் ஏற்கனவே விவேக்-மெர்வின் சாங்ஸ் பண்ணியிருந்தாங்க. பின்னணி இசை நீங்க பண்ணனும்னு கேட்டார் மாதேஷ் சார். அழைப்பு வந்தப்போ தெலுங்குல 'மஹாநடி' (நடிகையர் திலகம்) வேலை பாத்துக்கிட்டிருந்தேன். அதை முடிச்சுட்டு வந்து இதில் இணைந்தேன். மாதேஷ் சார்க்கு நன்றி. அவர் எப்பவுமே மாஸ் அப்பீலை விரும்புபவர். அவருக்கேற்றது போல மாஸாக, அதே நேரம் டால்பி அட்மாஸ்ல என்ஜாய் பண்ணற மாதிரி அமைத்திருக்கிறோம்.
'கடைக்குட்டி சிங்கம்' பட வெற்றி விழாவில் பேசிய நடிகர் சூரி, தான் நடித்ததிலேயே தனக்குப் பிடித்த படம் 'கத்துக்குட்டி' என்று சொன்னார். அந்தப் படத்திற்கு இசை நீங்க...
ஆமா... சூரி எந்த இடத்திலும் அந்தப் படம் குறித்து பெருமையாகப் பேசுவார். 'கடைக்குட்டி சிங்கம்' படம் விவசாயம் குறித்து சிறப்பாகப் பேசி பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் படம். அந்தப் படத்தின் வெற்றி விழாவிலேயே சூரி 'கத்துக்குட்டி' பற்றி பேசுறாரென்றால் பாருங்க. இயக்குனர் சரவணன் அந்தப் படத்தில், அப்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த 'மீத்தேன்' பிரச்சனையை தைரியமாகவும், மிக தெளிவாகவும் பேசுயிருந்தார். அந்தப் படத்தில் மீத்தேன் திட்டத்தின் ஆபத்தை விளக்கும் காட்சி, தனியா கட் செய்யப்பட்டு அந்த போர்ஷன் இப்போ வரைக்கும் சோஷியல் மீடியால செம்ம வைரலா போய்ட்ருக்கு. அந்தப் படம் பெருசா வெற்றி பெறாததற்கு ரிலீஸ் நேரம், ப்ரமோஷன்னு பல காரணங்கள் இருக்கலாம். ஆனா, அப்படி ஒரு படத்தில் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய பெருமை. அந்த வாய்ப்பைக் கொடுத்த சரவணன் சார்க்கு எப்பொழுதும் என் நன்றிகள். கண்டிப்பா அவரோட அடுத்த படம் மிகப் பெரிய வெற்றி பெரும், மிக முக்கியமான படமா இருக்கும். 'பூவரசம் பீப்பீ' படமும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியளித்த படம். அந்தப் படம் நம்மை அப்படியே பால்யத்துக்கு கூட்டிப் போச்சு. மனசை மயிலிறகால் வருடியது போன்ற படம். இசையும் அதற்கேற்ப பண்ணினோம். இயக்குனர் ஹலிதா ஷமீம் எதிர்காலத்தில் முக்கியமான இயக்குனரா வருவாங்க.
வெற்றியோ தோல்வியோ என் இயக்குனர்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்தவர்கள். எஸ்.பி.ராஜகுமார் சார் விஜயை வைத்து படம் செய்தவர். எனக்கு இரண்டு படங்கள் வாய்ப்பளித்தார். அது போல முதல் வாய்ப்பைக் கொடுத்த யுவராஜ் மறக்க முடியாதவர்.
சூரி உங்களுக்கு ரொம்ப ஃப்ரெண்டுன்னு கேள்விப்பட்டோம்...
ஹா...ஹா... சூரி என்னை எப்பவும் 'அண்ணே...அண்ணே'னு கூப்பிடுவார். நான் இத்தனைக்கும் வயதில் சின்னவன்தான் (கண்ணடிக்கிறார்). எங்க பாத்தாலும் விட மாட்டார், 'வாங்கண்ணே'னு கூப்பிட்டு சேர் இழுத்துப் போட்டு பக்கத்துல உக்கார வைப்பார். ரொம்ப அன்பா இருப்பார். அது அவரது பெருந்தன்மை, நல்ல குணம். விதார்த்தும் அதே மாதிரிதான், ரொம்ப அன்பா பழகுவார்.
சரி, பாகுபலி-2, நடிகையர் திலகம் படங்களையெல்லாம் எங்களுக்கு முன்னாடியே நீங்க பாத்துருக்கீங்க. உங்களோட ஃபீல் எப்படி இருந்தது?
ஆமா... பாகுபலி-2 நாங்க பார்த்தபோது ப்ளெய்னா இருந்தது. அதாவது மியூசிக், சவுண்ட்ஸ் எதுவுமில்லாம. அப்படி பார்த்தபோதே பிரம்மிச்சுதான் போய்ட்டோம். அதுக்கப்புறம் தியேட்டர்ல பார்த்தபோது என்னதான் ஏற்கனவே அந்தப் படத்தில் வேலை செய்திருந்தாலும் எங்களுக்கே அனுபவம் வேற லெவெல்ல இருந்துச்சு. அந்த அளவுக்கு டெக்னிகல் ஒர்க் உள்ள படம் அது. நடிகையர் திலகம் படமும் முதலில் பார்த்தபோதே ஆச்சர்யப்பட வைத்த படம்தான். இது மட்டுமில்ல, கில்லி, சந்திரமுகி, தூள், வில்லன்னு அந்த டைம்ல வெளியான பல மெகா ஹிட் படங்களில் வித்யாசாகர் சார் கிட்ட வேலை பார்த்தனால, மக்களுக்கு முன்னரே அதை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிருக்கோம். ஆனால், சந்திரமுகி வேட்டையன் மகாராஜா சீனும் சரி, கில்லில பிரகாஷ் ராஜை அடிக்கிற சீனும் சரி, வில்லன்ல அஜித் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீனும் சரி இதெல்லாமே இசை, சௌண்ட் எல்லாம் சேர்ந்துதான் கூஸ்பம்ப்ஸ் மொமென்ட்டா மாறும்.
வித்யாசாகர்கிட்ட பல படங்கள், பல வருடங்கள் வேலை பாத்துருக்கீங்க. அந்த பீரியட்ல வரிசையா படம் பண்ணினார் அவர். எப்படி சமாளிச்சீங்க?
ஹா...ஹா... அப்போல்லாம் எங்களுக்கு 'சன்டே'யே கிடையாது. நான் சென்னை வந்து முதலில் சென்ற இடம் வித்யாசாகர் சார் ஸ்டுடியோதான். அதுதான் என் குருகுலம், அவர்தான் என் குரு. 'ட்ரீம்ஸ்' மலையாளம் படத்தில் அவர்கிட்ட வேலை செய்தேன். அதுக்கப்புறம் தமிழில் தில் வந்தது. அப்போ இருந்து ஒரு பத்து வருஷத்துக்கு பிரேக்கே இல்லை. ஒவ்வொரு நாளும் புதுசுபுதுசா பல விஷயங்கள் கத்துக்குவோம் அவர்கிட்ட. அவரின் இசை ஒரிஜினலா இருக்கும், வார்த்தைகளுக்கு அழகா வழிகொடுத்து இசையமைப்பார். மெலோடிகள் அவரது மிகப்பெரிய ஸ்பெஷாலிட்டி. மெட்டுக்கு இசை, இசைக்கு மெட்டுன்னு ரெண்டு ஃபார்மேட்லயுமே அவர் எக்ஸ்பர்ட்.
ஒரு முறை, 'கனா கண்டேன்' படத்துக்காக வைரமுத்து சார் எழுதுன லிரிக்ஸ் வந்திருந்துச்சு. நாங்க திருட்டுத்தனமா வித்யாசாகர் சார்க்கு தெரியாம லிரிக்ஸ் பார்த்தோம். 'மூளை திருகும், மூச்சுக்குள் அடுப்பெரிக்கும், இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலமாடும்'னு இருந்துச்சு. 'என்னடா இது... இப்படி எழுதியிருக்காரு... இதுக்கு எப்படி ட்யூன் போடுவாரு'ன்னு எங்களுக்கு குழப்பம். வச்சுட்டு வந்துட்டோம். வித்யாசாகர் சார் வந்து கம்போஸ் பண்ண ஆரம்பிச்சார். ஒவ்வொரு வரிக்கும், அந்த வரியே இசையா மாறினா எப்படி இருக்கும், அப்படி ட்யூன் போட்டார். மூளை திருகும்... அப்படியே ஒரு சாவி நேரா போய் திருகிற மாதிரி நேரான ட்யூன். மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்... வெப்பம் தெரியுற மாதிரி இசை. இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும்... அந்த ட்யூனே பெண்டுலம் மாதிரி ஆடும். இப்படி வரிகளில் இருக்கும் ஆன்மாவுக்கு இசையில் உயிர் கொடுப்பார்.
மரகதமணி சாரும் என் மேல் ரொம்ப அன்பா இருப்பார். நாகர்ஜுனா நடித்த 'அன்னமய்யா' படம். அதுக்கு ஒரு பாடல் வேலை. நார்மலா 36 மணிநேரமாவது எடுக்கும். ஆனா, அவ்வளவு டைம் இல்லை. நான் சொன்னேன், 'கவலைப்படாதீங்க சார்... நான் பண்ணி தறேன்'னு. ஒரு நைட் ஃபுல்லா பண்ணி முடிச்சுத் தந்தேன். என்னை அப்படியே கட்டிக்கொண்டார். அந்த அன்பு பாகுபலி வரை கொண்டு வந்திருக்கு.
உங்க குடும்பத்தில் நீங்கதான் முதல் இசைக்கலைஞரா இல்லை முன்னரே தொடர்பு இருக்கா?
ஆமா... எங்க தாத்தா சந்தானம் ஆர்மோனியம் பிளேயர். எங்க அப்பா அக்கார்டின் சுவாமிநாதன். என் மனைவியின் தாத்தா தன்ராஜ் மாஸ்டர். அவர்கிட்டதான் ஏ.ஆர்.ரஹ்மான்ல இருந்து விஜய் வரை பல பிரபலங்கள் இசை கத்துக்கிட்டாங்க.
இப்போ எந்த மொழியில் என்னென்ன படங்கள் வேலை செய்யுறீங்க?
இப்போ மலையாளத்துல சுரேஷ் கோபி சார் பையன் நடிக்கிற 'பப்பு' நான் மியூசிக் பண்ணுறேன். அடுத்தும் மலையாளத்துல இன்னொரு படம். இதுல என்ன கோ-இன்சிடென்ஸ்னா, நான் வித்யாசாகர் சாருக்கு உதவியா பண்ணுன முதல் படம் சுரேஷ் கோபி சார் நடிச்சது. நான் நேரடியா இசையமைக்கிற முதல் மலையாள படம் அவர் பையன் நடிக்கிறது, எப்படி இருக்கு பாருங்க...
ஆம், வாழ்க்கை கோஇன்சிடென்ஸ்கள் நிறைந்தது. அதே நேரம் நடக்க வேண்டியவை நடக்காமல் இருக்கும் புதிர்களும் நிறைந்தது. விரைவில் புகழ் வெளிச்சத்துக்கு வந்துவிடுவார் அருள்தேவ்.