Skip to main content

மனோபாலாவுக்கும் கமலுக்கும் உள்ள உறவு - மனம் திறக்கும் முரளி அப்பாஸ்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

Murali Abbas Interview

 

மறைந்த இயக்குநர், நடிகர் மனோபாலாவுக்கும் தனக்கும் உள்ள உறவு பற்றியும், நடிகர் கமல்ஹாசனுக்கும் மனோபாலாவுக்கும் இடையிலான உறவு குறித்தும் இயக்குநர் முரளி அப்பாஸ் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

 

இயக்குநர் கலைமணி உதவியாளராக நான் இருந்தபோது மனோபாலா உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நல்ல நெருக்கமாகப் பழகினோம். அவர் எப்போதும் ஜாலியான மனிதர். நல்ல இயக்குநர். பாரதிராஜா உடன் பணியாற்றும்போது அவருடைய நம்பிக்கையைப் பெற்றவர். நல்ல படங்களை இயக்கியவர். 69 வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவர் நன்றாக சமைப்பார். பொதுவாகவே அசிஸ்டண்ட் டைரக்டர்களாக இருப்பவர்கள் அப்போதே சமைக்கவும் கற்றுக் கொள்வார்கள். அவருடன் பழகிய அனைவருமே அவரை மிஸ் செய்வார்கள்.

 

கமல் ஆபீசுக்கு அவர் அடிக்கடி வருவார். அந்தக் காலத்தில் அவர்கள் எல்லாம் ஒன்றாகப் பயணித்தவர்கள். பாரதிராஜா சாரிடம் அவரை உதவியாளராக சேர்த்துவிட்டது கமல் சார் தான். இருவரும் நீண்ட கால நண்பர்கள். சினிமா, சீரியல் என்று இரண்டையும் இயக்கியவர். அதன்பிறகு நடிப்பில் கலக்கினார். அவருடைய இழப்பு மிகப்பெரியது. அனைத்து வகையான படங்களையும் அவர் இயக்கினார். மேக்கிங்கில் அவர் சிறந்து விளங்கினார். சரியான நேரத்தில் ஷூட்டிங் ஆரம்பித்து முடித்து விடுவார். 

 

எழுத்தாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அவர் ஒரு வரப்பிரசாதமாக இருந்தார். அவரோடு பழகிய யாராலும் அவரைப் பிரிய முடியாது. ஏனெனில் சினிமாவை மீறி அவர் அனைவரோடும் நண்பராகப் பழகினார். யாரைப் பற்றியும் யாரிடமும் தவறாகப் பேசமாட்டார். எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் மனிதராக அவர் இருந்தார். இளம் இயக்குநர்களோடும் ஈகோ இல்லாமல் பழகியவர். எப்போதும் இயல்பாக இருப்பார். அவருடைய இழப்புக்காக சினிமாவில் வேலை செய்யும் லைட்மேன் முதற்கொண்டு அனைவரும் இன்று வருத்தப்படுகின்றனர். அவருடைய வாழ்க்கை அப்படிப்பட்டது. மனோபாலா சார் சினேகமான மனிதர். மயில்சாமி சார் போல் அவரும் பலருக்கு உதவி செய்துள்ளார். அப்படி ஒரு அருமையான மனிதரை இன்று நாம் இழந்திருக்கிறோம்.

 

 

சார்ந்த செய்திகள்