கரோனா அச்சுறுத்தலால் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நான்காம் கட்ட தளர்வுகளை மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. மக்கள் கூடும் பல விஷயங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு. ஆனாலும், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்களுக்கு தடை தொடரும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை அறிவித்துள்ளது. அதில் சினிமா பட ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் திரைதுறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் திரையரங்கை திறக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றனர்.
இந்த நிலையில், நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளை திறக்கவேண்டும் என்று இந்திய மல்டிப்ளெக்ஸ் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய மல்டிப்ளெக்ஸ் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதில், “உலகின் பெரும்பாலான நாடுகள் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்துவிட்டன. இங்குள்ள திரையரங்குகளையும் திறக்க அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சினிமா அனுபவத்தை நாங்கள் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். சினிமா துறை என்பது இந்தியா கலாச்சாரத்தின் நிலையான அங்கம் மட்டுமல்ல, லட்சக்கணக்கானோரின் வாழ்வுக்கு ஆதாரமான விளங்கி நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.