ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்திலே படக்குழு முடித்தது. த்ரில்லர் டிராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி படக்குழு நடத்தியது. அதில் படக்குழுவினருடன் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய எம்.எஸ் பாஸ்கர், “எங்கிட்ட வந்து கதை சொன்ன போது, ஒரே வீட்டில் ஒரே பார்க்கிங். ஹீரோவும் கார் வச்சிருக்கார். நீங்களும் கார் வச்சிருக்கீங்க அவ்ளோதான் சொல்லப்பட்டது. இந்த பிரச்சனை அப்பார்ட்மண்ட், அல்லது இரண்டு பேர் இருக்கும் வீடுகளில் மட்டும் இல்லை. பொது இடங்களில் கூட இருக்கு. வேக வேகமாக வந்து நிறுத்துவது, முன்னாடியே வருவது, 1 ஹவர் பர்மிஷன் போட்டு வருவது என எல்லாமே இருக்கு.
நான் வச்சிருக்கிறது கொஞ்சம் பெரிய வண்டி. எங்களுடைய அப்பார்ட்மெண்ட்டில் கூட, ஒருத்தர் டாக்குமெண்ட்டை காமிங்க. உங்க வண்டி கோட்டை தாண்டி முன்னாடி நீட்டிட்டு நிக்குது. நாளைக்கு வித்திடறேன் என சொன்னார். இது போல பார்க்கிங் பிரச்சனை பல இடத்திலும் இருக்கிறது. இப்படி எல்லோருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனையை எடுத்து, அதை ரசிக்கின்ற விதமாக சொல்லியிருக்கக்கூடிய இயக்குநரை பாராட்டுகிறேன். நான் எப்போதும் ஷூட்டிங்கிற்கு செல்லும் போது அந்த கதாபாத்திரத்தின் மூடிலேயே கிளம்பி போவேன். ஏனென்றால், என் அப்பா சிவாஜியுடைய வெறியன். அண்ணன் கமலுடைய பக்தன்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னுடன் பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுவதாக சொன்னார். ஆனால் எங்க அண்ணாவை வைத்து இயக்கிவிட்ட உங்களோடு பயணிக்க நான் ஆசை படுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கனு அவரிடம் கேட்டுக்கிறேன். வயதில் என்னுடைய இளையவராக இருந்தாலும் பெரும் புகழை பெற்றுள்ளவர். இன்னமும் பெறப்போகிறவர்” என்றார்.