‘ஒரு நாள் கூத்து’இயக்கிய நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மான்ஸ்டர்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. வருகிற மே 17ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இன்று சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அப்போது பேசிய ப்ரியா பவானி சங்கர், “இசை வெளியீட்டு விழா என்கிற ஃபார்மாலிட்டிக்காக நான் தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோவுக்கு நன்றி சொல்கிறேன். ஆனால், இது என்னுடைய படம்தான். எஸ்.ஜே சூர்யா சாருடன் படம் என்று முதலில் சொன்னபோது கொஞ்சம் எனக்கு இது செட்டாகுமா என்று இயக்குனரிடம் சொன்னேன். எஸ்.ஜே. சூர்யா சார் படங்களெல்லாம் பார்த்துதானே வளர்ந்திருக்கேன். நீங்கள் முதலில் கதையை கேட்டுவிட்டு பின்னர் சம்மதமா இல்லையா என சொல்லுங்கள் என்றார் இயக்குனர்.
ஷூட்டிங் தொடங்கியவுடன் என்னை அவ்வளவு நன்றாக அனைவரும் பார்த்துக்கொண்டார்கள். ஷூட்டிங் 25 நாட்கள் எனக்கு நடைபெற்றிருக்கும், நான் பயங்கரமாக எஞ்சாய் செய்த செட் இது. என்னுடன் நடிக்க எஸ்.ஜே. சூர்யா சார் மிகவும் பயந்து பயந்து நடித்தார். அவருக்கு அவ்வளவு டெம்பர் இருக்கும் என்று சூர்யா சாரின் துணை இயக்குனர் சொல்வார். ஆனால், ஹீரோவாக செட்டுக்குள் அவர் வரும்போது மிகவும் பொறுமையாக இருப்பார். அவர் பல நினைவுகளை பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் துணை இயக்குனராக தொடங்கியதிலிருந்து இப்போதுவரை என்று பல நினைவுகளை பகிர்வார். அதேபோல கருணாகரனும் நிறைய பகிருந்துகொள்வார். இவர்கள் இருவரும் செட்டில் இருக்கும்போது நமக்கு மொபைல் போனே தேவைப்பாடு. இவர்களிடமே நிறைய பேசுவதற்கான கண்டெண்ட் இருக்கும்.
இயக்குனர் நெல்சனை பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர் மைண்டில் ஒன்றை வைத்திருப்பார். அதை புரிந்துகொண்டு நடிகர்கள் சரியாக செய்யும் வரை எடுத்துகொண்டே இருப்பார். அடுத்த நாளானாலும் சரி, அவர் நினைத்தைதான் எடுப்பார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில் கிளியராக இருக்கிறார். டப்பிங்கில் படத்தை பார்த்தேன் படம் நன்றாக வந்திருக்கிறது. நீங்களும் படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.