Skip to main content

அஜித் பெயரில் பண மோசடி - அறியாமையால் ஏமாந்த கணவர்; புகார் கொடுத்த மனைவி

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Money Fraud in nellai using Ajith Name

 

அஜித் தன் ரசிகர் மன்றங்களைக் களைத்துப் பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது அந்த மன்றம் மூலம் அஜித் ரசிகர் ஒருவர் ஏமாந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கு அஜித் வீடு கட்டித் தருவதாகக் கூறி தனது கணவர் ஐயப்பனை சிவா என்பவர் ஏமாற்றியுள்ளதாக ஐயப்பனின் மனைவி ராஜேஸ்வரி புகார் கொடுத்துள்ளார். 

 

திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஐயப்பன். தீவிர அஜித் ரசிகராக இருந்து வந்த ஐயப்பனிடம், நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், தனக்கு அஜித் ரசிகர் மன்றத் தலைவரின் மேலாளர் நெருக்கமானவர் என்று கூறி ஐயப்பனிடம் அறிமுகமாகிறார். 

 

மேலும், நடிகர் அஜித் கஷ்டப்படும் ரசிகர்களுக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டித் தருகிறார் எனக் கூறி ஐயப்பனை நம்ப வைத்துள்ளார். ஐயப்பனும் இது உண்மை என நம்பி சிவாவிடம் வீடு கட்டுவது தொடர்பாக தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதையடுத்து சிவா வீடு கட்டித் தருவதற்கு முன்பாக பத்திரப் பதிவுக்காக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் முன்பணம் செலுத்தியவுடன் திருப்பி பத்திரத் தொகையுடன் வீடு கட்டுவதற்கான தொகை ரூ.15 லட்சமும் உங்கள் வாங்கி கணக்குக்கு வந்துவிடும் என சொல்லியிருக்கிறார். 

 

இதைக் கேட்ட ஐயப்பனும் தான் சேர்த்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தி பத்தாயிரம் ரூபாயை சிவாவிடம் கொடுத்துள்ளார். மேலும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறி போலியாக ஒரு நபரை பேச வைத்து ஐயப்பனை நம்ப வைத்துள்ளார். பணத்தை வாங்கிய பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ஐயப்பன் வீடு தொடர்பாக சிவாவிடம் கேட்டுள்ளார். சிவாவிடம் முறையான பதில்கள் வராததால் கோபமடைந்த ஐயப்பன் சிவாவிடம் தான் கொடுத்த பணத்தைத் திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தைத் தர மறுத்த சிவா, இதனை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் உங்களைக் கொன்று விடுவோம் எனக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஐயப்பனின் மனைவி ராஜேஸ்வரி போலீசில் அளித்த தனது புகார் மனுவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் அந்த மனுவில் அறியாமையால் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐயப்பனின் மனைவி ராஜேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்