பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில், நடிகர் மோகன்லால் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' என்ற சரித்திர படத்தில் நடித்துள்ளார். இப்படம் 100 கோடி பட்ஜெட் செலவில் உருவாகியுள்ளது. இதில், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' படத்தின் பணிகள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முடிவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இப்படம் வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. அதனையடுத்து கடந்த மார்ச் மாதம் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், ஓணம் பண்டிகைக்குப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அப்போதும் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் கரோனா பரவலால் திரையரங்குகளில் 50 சதவித பார்வையாளர்களுக்கு மட்டும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. பெரிய பட்ஜெட் படத்தை தற்போது திரையரங்கில் வெளியிட்டால் பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சிறந்த திரைப்படம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் இப்படம் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.