Skip to main content

"ஒரு கிறிஸ்தவ பாதிரியார்தான் இந்தப்படத்தை எடுக்கச் சொன்னார்..." படம் உருவான விதம் குறித்து மோகன் ஜி பேச்சு! 

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

mohan g

 

மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ருத்ர தாண்டவம்'. ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜீபின் இசையமைத்துள்ளார். யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் தமிழக உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். மொத்த வெளிநாட்டு ரிலீஸ் மற்றும் ஆடியோ ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, "திரௌபதி படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.  இரண்டு பெரிய ஹீரோக்கள்கூட பெரிய சம்பளத்தில் படம் பண்ண கேட்டார்கள். எனக்கு பெரிய நடிகர்கள் படத்தை இயக்குவதைவிட என்னைச் சுற்றியுள்ள விஷயங்களை படமாக்குவதில்தான் ஆசை, விருப்பம் உள்ளது. என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் பாதிரியாராக உள்ளார். திரௌபதி படம் பார்த்துவிட்டு அவர்தான் இந்தக் கதையை கூறி, இது மாதிரி ஒரு படம் எடுக்க உனக்கு தைரியம் இருக்கிறதா என்றார். அதற்கு பிறகுதான் கிறிஸ்தவ மதத்தை எப்படி கார்ப்பரேட் மாதிரி மாற்றி வைத்துள்ளார்கள் என்று எனக்கு தெரியவந்தது. மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ் திரைப்படம் அதை பற்றி விரிவாக பேசியது. தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் இது பெரிய அளவில் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதை படமாக எடுத்தால் பெரிய அளவில் விழிப்புணர்வு கிடைக்கும் என்பதால் இதை படமாக எடுத்தேன்.

 

இன்று, இந்து மதத்தை அழித்துவிடுவேன் என மேடை கிடைக்கிறது என்பதற்காக எளிதாக பேசிவிட்டு கைத்தட்டல் வாங்கிவிடுகிறார்கள். அதற்கு பின்னால் எவ்வளவு பெரிய கார்ப்பரேட் அரசியல் இருக்கிறது என்பது பொதுமக்களுக்கு தெரியாது. அந்த பாதிரியார் அவரோட பார்வையில் இருந்து இதைக் கூறும்போது ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. நாங்க இவ்வளவு ஆண்டுகளாக உண்மையான கிறிஸ்தவராக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு ஒரு புதிய கும்பல் வந்து இந்துவாகவும் இல்லாமல் கிறிஸ்தவராகவும் இல்லாமல் எங்களை வந்து கேள்வி கேட்கிறார்கள். இதை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை என்றார். இதுதான் நம்முடைய அடுத்த படம் என முடிவெடுத்து ருத்ர தாண்டவம் எனப் பெயரிட்டு வேலையை ஆரம்பித்தேன். இப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது" எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்