உலக அளவில் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியான 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியைத் தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவருகிறார். தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்கிவந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், நடிகை தமன்னா நீக்கப்பட்டு, திடீரென தெலுங்கிற்கான புதிய தொகுப்பாளராக அனுசுயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகை தமன்னா நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், நடிகை தமன்னா தரப்பு வழக்கறிஞர் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், 'மாஸ்டர் செஃப்' தெலுங்கு பதிப்புக்கான சம்பள பாக்கி நிலுவையில் இருந்தபோதிலும், முழு நிகழ்ச்சியையும் முடித்துக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தமன்னா தொடர்ந்து தொகுத்து வழங்கிவந்ததாகவும், ஆனால் தயாரிப்பு தரப்பு திடீரென தமன்னாவுடன் தொடர்பை நிறுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தயாரிப்பு நிறுவனமான இன்னவேடிவ் ஃபிலிம் அகாடமியின் தொழில் முறையற்ற இந்த அணுகுமுறையால் தமன்னா சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இன்னவேடிவ் ஃபிலிம் அகாடமி தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்த இறங்கிவந்தால் தமன்னா சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் முடிவை கைவிட வாய்ப்புள்ளது என சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்பட்டுவந்த நிலையில், தயாரிப்பு தரப்பின் தொழில்முறையற்ற அணுகுமுறை தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதால் வழக்கு தொடரும் முடிவில் நடிகை தமன்னா உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.