
பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர் பூனம் பாண்டே. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் எனக் கூறி சர்ச்சைக்கு ஆளானார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்த சூழலில் கடந்த 2 ஆம் தேதி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
மேலும் அவரது குடும்பத்தாரைப் பலரும் தொடர்பு கொண்டபோது, யாராலும் நெருங்க முடியவில்லை எனவும் செய்திகள் வெளியானது. மேலும் எங்கு இறந்தார்? எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்படவுள்ளது எனப் பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது. அதோடு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்கின்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு அடுத்த நாளே பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
இதையடுத்து கடந்த 3 ஆம் தேதி பூனம் பாண்டே, தான் உயிரோடு இருப்பதாக தெரிவித்து அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். மேலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். இவரது இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது. மேலும் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பூனம் பாண்டே மீது ஃபைசான் அன்சாரி என்பவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் சாம் ஆகியோர் சொந்த விளம்பரத்துக்கு இதுபோன்று செய்து கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையோடு விளையாடியுள்ளதாக குற்றம்சாட்டி ரூ.100 கோடி கேட்டுள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த கான்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.