மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மையக்கருவாக வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் வாழை. இப்படத்தை மாரி செல்வராஜும் அவரது மனைவி திவ்யாவும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்திருந்தார். இப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்திற்கு பாரதிராஜா, மணிரத்னம், வெற்றி மாறன், ராம், மிஷ்கின், நெல்சன், சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ், பா.ரஞ்சித், கார்த்தி, லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தன. திரை பிரபலங்களைத் தாண்டி அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன் எம்.பி, சீமான், ராமகிருஷ்ணன் ஆகியோரும் மாரி செல்வராஜைப் பாராட்டினர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்படத்திற்கு இன்று காலை பாராட்டு தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி. காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரிக்கு மீண்டும் வாழ்த்துகள்” என்று பாராட்டியிருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் வாழை படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ரஜினிகாந்த் வாழ்த்திற்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அன்று பழைய தகரபெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களைத் தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன் . உங்கள் வாழ்த்திற்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் எங்கள் சூப்பர் ஸடாரே” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற மாமன்னன் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு படம் பண்ண பேச்சு வார்த்தை நடந்ததாக மாரி செல்வராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.