இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ள நிலையில் நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் மன்சூர் அலிகான் கரோனா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்...
''கரோனாவை பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. நம் மூதாதையரின் வைத்தியமே கரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடும். சளி, இருமல் போன்றவைகள் வந்தால், சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவற்றை கொதிக்க வைத்து குடித்தால், இரண்டு நாட்களிலேயே சளி காணாமல் போய்விடுகிறது. மேலும், தூதுவலை உள்ளிட்ட ஏகப்பட்ட இயற்கை மருத்துவம் நம் கையில் இருக்கிறது. இப்படி சளி மற்றும் காய்ச்சலை வைத்து வரும் கரோனாவையும், நம் உணவு பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரை பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கு போட்டிருக்கக்கூடாது என்பதுதான் என் கருத்து. இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமும், வாழ்வும் கேள்விக்குறியாகியிருப்பதோடு, நாடே மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கிறது. பல துறைகள் மீண்டும் பழையபடி செயல்பட உத்தரவிட வேண்டும், என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களையும் திறக்க வேண்டும், என்றும் கேட்டுக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.