மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடுஜீவிதம்’ நாவலை, அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஆடு மேய்க்கும் தொழிலாளியாகச் சேர்கிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலியை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.
இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகின்ற 28 ஆம் தேதி இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரையிடலுக்கு பின் பலரும் படக்குழுவை பாராட்டிய நிலையில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர்.
கமல்ஹாசன் கூறுகையில், “இயக்குநர் பிளெஸ்ஸிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உண்மையாகவே கடின உழைப்பை கொடுத்துள்ளார். கேமராமேனும் சிரமப்பட்டுள்ளார். படக்குழு இவ்வளவு தூரம் செல்வார்கள் என நினைக்கவில்லை. சிறந்த படம் என படமெடுப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை மக்களும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்றார். மணிரத்னம், பேசுகையில், “உறையவைக்கும் காட்சிகள். ப்ரித்விராஜ் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மொத்த படக்குழுவும் தான். எப்படி இப்படத்தை உருவாக்கினார்கள் என தெரியவில்லை. அவர்கள் மீது பொறாமை கொள்ளவில்லை. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்றார்.