மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரை தொடர்ந்து படக்குழுவினர் சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இதில் இயக்குநர் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா ஆகியோர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
கார்த்தி கூறுகையில், "இதுபோன்ற அற்புதமான படைப்பை எங்களுக்கு வழங்கிய கல்கிக்கு நன்றி. படத்தில் நான் உட்பட அனைவருக்கும் நிறைய சவால்கள் இருந்தது. எம்ஜிஆர் முதல் கமல் சார் வரை பலர் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்றபோது நிறைய அழுத்தங்கள் இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் கொட்டி உழைத்தேன். எல்லோரும் உங்களைத் தவிர வந்தியத்தேவனாக யாரையும் நினைக்க முடியவில்லை என்றபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. முதல் முறையாக என்னுடைய படம் பார்த்து என் அம்மா பாராட்டினார்கள்.
படத்தைப் பற்றி ஏற்கனவே நிறையப் பேசிவிட்டோம். இதன் க்ளைமேக்ஸ் மட்டும்தான் சொல்லவில்லை. வந்தியத்தேவனுக்கு இதில் நிறைய வேலைகள் இருக்கிறது. குந்தவை மற்றும் நந்தினி பாத்திரங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் மீண்டும் சந்திக்கும் காட்சிகள் இந்த பாகத்தில் வரும். எனது நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்திற்கும் வந்தியத்தேவனுக்கும் இடையே ஒருவித ஒற்றுமை உள்ளது. ஏனெனில் இருவரும் உடனடியாக எல்லோருடனும் நட்பு கொள்ளும் குணம் கொண்டவர்கள்" என்றார்.
இயக்குநர் மணிரத்னம் கூறுகையில், "கல்கி கதாபாத்திரங்களை மிகவும் கச்சிதமாக உருவாக்கியுள்ளார். புத்தகத்திலிருந்து எதையும் மாற்ற்வில்லை. அனைத்து கதாபாத்திரங்களையும் அவர் உருவாக்கியிருந்த விதம் எங்கள் வேலையை எளிதாக்கியது. இரண்டாம் பாகம் முதல் பாகத்திலிருந்து தொடங்கும். போர்க் காட்சிகள் நிறைய இருக்கும். முதல் பாகம் வெறும் அறிமுகம் தான். இரண்டாம் பாகத்தில் தான் கதையே முழுதாக வரும். பாடல்களுக்கோ காமெடிக்கோ இதில் இடமில்லை. கல்கி எழுதியதை முடிந்த அளவு திரையில் கொண்டு வர முயன்றுள்ளோம். இப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இதற்குள் எதற்கு மதத்தை கொண்டு வருகிறீர்கள். ராஜ ராஜ சோழ மன்னன் நமது பெருமை. தேவையில்லாத சர்ச்சையை இதில் கிளப்ப வேண்டாம்" எனக் கூறினார்.