மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகம் போலவே தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அண்மையில் கமல் குரலில் ஒரு முன்னோட்ட வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தியா முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் படக்குழுவினர். அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்னம், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், "முதலில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் பொன்னியின் செல்வன் உருவாகியிருக்காது. தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கும் நன்றி. நான் ஏற்கெனவே சொல்லி இருக்கேன். இருப்பினும் சொல்கிறேன் ராஜமெளலிக்கு நன்றி. பாகுபலி படம் இரண்டு பாகங்களாக உருவாக்காவிட்டால் பொன்னியின் செல்வன் படமும் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்காது. பாகுபலி படம் நிறைய வரலாற்று கதைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சினிமாத்துறையில் பலருக்கும் கொடுத்தது" என்றார்.