மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். பாலியல் குற்றங்கள் தொடர்ந்து எழுந்து வந்ததால் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் மோகன்லால் உட்பட 17 செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர். மேலும் அம்மா அமைப்பை கலைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்தனர். இதனையடுத்து, சமீபத்தில் நடிகர் மோகன்லால் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடிகர் மம்முட்டி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மம்முட்டி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமைப்பும், அதன் தலைமையும் முதலில் அதற்கு பதில் தருவதே அமைப்பின் முறை. அவர்களின் பதில்களுக்குப் பிறகுதான் ஒரு உறுப்பினராக எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதனால்தான் நான் இவ்வளவு நாள் காத்திருந்தேன். சினிமாவே சமூகத்தின் சுற்றறிக்கை தான். சமூகத்தின் அனைத்து நன்மைகளும், நல்லொழுக்கங்களும் சினிமாவிலும் உண்டு. திரைத்துறையை சமூகம் உன்னிப்பாக கவனிப்பதால், சின்ன சின்ன பிரச்சனையாக இருந்தாலும், பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகிறது. திரைத்துறையில், அசம்பாவிதம் நிகழாத வண்ணம் திரைத்துறையினர் கவனத்தோடு இருக்க வேண்டும்.
ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை நான் முழு மனதுடன் வரவேற்று ஆதரிக்கிறேன். திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களும் கைகோர்த்து அவற்றை செயல்படுத்த வேண்டிய நேரம் இது. தற்போது எழுந்துள்ள புகார்கள் மீது போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தில் உள்ளது. போலீஸ் நேர்மையாக விசாரிக்கட்டும். தண்டனைகளை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். சினிமா என்பது இதுபோன்ற விஷயங்கள் இருக்கக்கூடிய களம் அல்ல. ஹேமா கமிட்டி அறிக்கையின் நடைமுறை பரிந்துரைகளை செயல்படுத்த சட்டத் தடைகள் இருந்தால் தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும். கடைசியில், சினிமா வாழ வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.