மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டு தொடர்ந்து பல படங்கள் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் முதன் முதலில் ரூ.200 கோடி வசூலித்த படமாக இருக்கிறது. ஆடுஜீவிதம் குறுகிய நாட்களில் ரூ.100 கிளப்பில் இணைந்தது. மேலும் பிரேமலு, பிரம்மயுகம் எனத் தொடர் வெற்றிப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் அண்மையில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளப் படங்களை, திடீரென அவர்களது திரையரங்குகளில் திரையிடுவதை எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தினர். இதற்கு காரணமாக திரையிடப்படும் விபிஎஃப் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தங்களது திரையரங்குகளில் க்யூப், யுஎஃப்ஓ, உள்ளிட்ட சில ஃபார்மெட்களில் படங்களைத் திரையிடுவதற்கு விபிஎஃப் என்ற கட்டணத்தை தயாரிப்பாளர்களிடத்தில் வசூலித்து வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மாற்றாக ‘பிடிசி’ எனப்படும் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் படங்களை திரையிட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் இந்த முடிவை எதிர்த்துதான் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளத் திரைப்படங்களை நிறுத்தியுள்ளார்கள். இதனால் இந்த விவகாரம் தற்போது மலையாளத் திரையுலகில் பெரிதாக பேசப்படுகிறது. திரைப்படங்கள் திரையிடப்படாததால் வசூலைப் பாதிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அதனால் இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேசி, பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தால் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம், ஜெய் கணேஷ் ஆகிய மலையாளப் படங்கள் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.