
மகேஷ் பாபு - த்ரிஷா நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் ‘அத்தடு’. திரி விக்ரம் இயக்கிய இப்படத்தில் சோனு சூட், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜெயபேரி ஆர்ட்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்திருந்தார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தாண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் மாறியது. ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் திரையரங்குகளில் 150 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.
பின்பு தமிழில் மற்றும் இந்தியில் டப் செய்து வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்தியில் மற்றும் பெங்காலியில் ரீமேக்கும் செய்யப்பட்டது. இந்த நிலையில் இப்படம் உலக சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ‘ஸ்டார் மா’ தொலைக்காட்சியில் 1500 முறைக்கு மேல் ஒளிபரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து இதுவரை எந்த தெலுங்கு படமும் இத்தனை முறை ஒளிபரப்பியதில்லை என ஒரு இணையதளம் சர்வே வெளியிட்டுள்ளது.
சாட்டிலைட் தொலைக்காட்சியில் புதிய சாதனை படைத்த முதல் தெலுங்கு படமாக இப்படம் மாறியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் இப்படம் அதே தொலைக்காட்சியில் 1000 முறை ஒளிபரப்பப்பட்டு சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.