மகேஷ் பாபு, ஸ்ரீ லீலா நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குண்டூர் காரம். எஸ். ராதா கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சங்கராந்தி விழாவை முன்னிட்டு வருகிற 12 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதனால் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அப்போது மகேஷ் பாபு, ரசிகர்கள் தான் எனக்கு இனி அப்பா அம்மா என எமோஷ்னலாக பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், “சங்கராந்தி விழா எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். என்னை விட, என் அப்பா கிருஷ்ணாவுக்கு இது ஸ்பெஷல். என் படம் சங்கராந்திக்கு ரிலீஸ் என்றால், அது நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகிடும். அது இந்த வருடமும் தொடரும். ஆனால் இந்த சங்கராந்தி எனக்கு புதிது. ஏனென்றால் என் அப்பா எங்களுடன் இல்லை. அவர் ஒவ்வொரு முறையும் எனக்கு போன் செய்து என் படத்தின் வசூல் பற்றி பேசுவார். அதை கேட்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் எப்போதும் அந்த போனுக்காக காத்திருப்பேன்.
ஆனால் இப்போது ரசிகர்களாகிய நீங்கள்தான் எனக்கு அதை சொல்ல வேண்டும். இனிமேல் நீங்கதான் என் அப்பா, நீங்கதான் என் அம்மா. நீங்கதான் எனக்கு எல்லாமே. உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு இருக்க வேண்டும்” என்றார். கடந்த ஆண்டு மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு, தாயார் இந்திரா தேவி மற்றும் தந்தையார் கிருஷ்ணா ஆகியோர் காலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.