எழுத்தாளரும், நடிகருமான பூ ராமு காலமானார். கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான 'பூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு. இதற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் பூ ராமு நடித்திருந்தாலும் பூ படமே அவரை ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. இதன் காரணமாகத்தான் இவர் தனது பெயருக்கு முன்னாள் பூ ராமு என்று சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு தங்கமீன்கள், நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று, பேரன்பு, மழை நேரத்து மயக்கத்திலே உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ள பூ ராமு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்ட இரங்கல் பதிவில், “அன்புத்தோழன் மக்கள் கலைஞன் பூ ராமுவுக்கு எனது இதய அஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார். இதே போன்று இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட பதிவில், “நீர்ப்பறவை மீனவா, இடம் பொருள் ஏவல் சிகப்புத் துண்டு மாரியப்பா, கண்ணே கலைமானே விவசாயி இனி நான் காண வைத்திருக்கும் பாத்திரம் எப்படி நிறையும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்களை தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.