இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய சந்திரயான் - 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3 பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றுள்ளது.
இதையடுத்து ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் - 2 ஆர்பிட்டரோடு, சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாகத் தகவல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை தொடர்பு கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலமாக ரோவரிடம் இருந்து பெறும் தகவல்களை லேண்டர் இஸ்ரோவிற்கு அனுப்பும். சந்திரயான் - 2 திட்டத்தில் லேண்டரை தரையிறக்கும் திட்டம் தோல்வி அடைந்தாலும் கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான் - 2 ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இஸ்ரோவின் திட்டப்படி இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்து கணினிகளும் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது என இஸ்ரோ அறிவித்திருந்தது.
லேண்டர் நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய 45 நிமிடங்களுக்குள் ரோவர் வெளியே வந்து ஆய்வைத் தொடங்கும் பட்சத்தில் இந்த திட்டம் வெற்றி எனக் கருதப்படுகிறது. தொடர்ந்து 14 நாட்களுக்கு ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். மேலும் சந்திரயான் - 3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கும் காட்சிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் மாதவன் தனது எக்ஸ் பக்கத்தில், "என் வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சந்திரயான் 3 நிச்சயம் வெற்றி பெறும். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறேன். அற்புதமான வெற்றியை பெறப்போகும் இஸ்ரோவுக்கும், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மாதவன் நடித்து இயக்கி கடந்த ஆண்டு வெளியான படம் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'. இப்படம் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Chandrayaan-3 WILL BE ABSOLUTE SUCCESS —- MARK MY WORDS . Congratulations @isro .. IN ADVANCE .. on this spectacular success .. I AM SO SO HAPPY AND PROUD … congratulations to @NambiNOfficial too .. Vikas engine delivers yet once again during the launch.…— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 23, 2023