மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ளதாலும் மாரி செல்வராஜ் படம் என்பதாலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
படத்தின் வெளியீட்டை ஒட்டி உதயநிதியின் ரசிகர்கள் திரையரங்கில் ஸ்வீட் கொடுத்தும் வெடி வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தைப் பார்த்த கமல், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தியிருந்தனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்தியிருந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திருநெல்வேலியில் இப்படம் ஓடிய ஒரு திரையரங்கின் முன்பு படத்தை தடை செய்யக் கோரி புலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திரையரங்கை முற்றுகையிட்ட போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த போராட்டக்காரர்கள், "தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய மாமன்னன் படத்தை தமிழக முதல்வர் ஏன் சென்று பார்வையிட வேண்டும். தென் மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் ஓட்டு அவருக்கு தேவையில்லையா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் படம் எடுத்தால் அதை முதல்வர் ஊக்குவிக்கின்றாரா?
முன்னதாக அந்த இயக்குநர் எடுத்த பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்கள் தேவர் சமுதாயத்திற்கு எதிராகவே எடுக்கப்பட்டன. அதைப் போலத்தான் இப்படத்திலும் மாமன்னன் புலித்தேவரை குறிக்கும் வாசகம் அடங்கியிருக்கிறது. அதனால் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறினோம். இப்படியிருக்கும் சூழலில் அந்த இயக்குநரை கட்டிப்பிடித்து பாராட்டு தெரிவித்திருக்கிறார் முதல்வர். அவருக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தையும் தோல்வியையும் இப்படம் கொடுக்கும். இப்படமும் தோல்வி அடையும். எங்கள் போராட்டம் இதோடு முடியாது" என்றார்கள்.