ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்திலே படக்குழு முடித்தது. த்ரில்லர் டிராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி படக்குழு நடத்தியது. அதில் படக்குழுவினருடன் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “இந்த படம் முன்னாடியே பார்த்து விட்டேன். ஒரு பெரிய ப்ளாக்பஸ்டர் படத்திற்கான எல்லா அம்சங்களும் இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கு. பார்க்கிங் என்பது ஒரு சின்ன விஷயம், அது எவ்ளோ பெரிய விஷயமாக மாறியிருக்கிறது என்பது கதை. இதை எல்லாருமே ஈஸியாக கனெக்ட் பண்ணிக்க முடியும் என நம்புகிறேன். இந்த படத்தில் மெயின் டெக்னீஷியன் எல்லாமே என்னுடைய நண்பர்கள்.
இந்த படத்தை பார்த்த போது மலையாள படமான அய்யப்பனும் கோஷியும், ட்ரைவிங் லைசன்ஸ் போன்ற படங்களை போல் இரண்டு கேரக்டர்ஸுக்குள் ஈகோ க்ளாஷ், அந்த மாதிரியான ஒரு படமாக இருந்தது. எல்லாருமே சிறப்பாக அவரவர்கள் பணிகளை செய்தார்கள். எம்.எஸ் பாஸ்கர் சாருடன் வேலை பார்க்க வேண்டும் என பெரிய ஆசை. கூடிய சீக்கிரத்தில் அது நடக்கும் என நினைக்கிறேன்” என்றார்.