கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது. இதனைத்தொடர்ந்து கைதி படத்தின் சீக்குவலாக அண்மையில் வெளியான விக்ரம் படமும் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் LCU (Lokesh Cinematic Universe) என்ற பெயரில் விக்ரம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கவுள்ளதாக அறிவித்தார்.
இதனிடையே லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். ஆனால் அது LCU-வா அல்லது தனித்த படமா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. படத்தின் அறிவிப்பிற்கு பிறகுதான் இது குறித்து உண்மையான தகவல் வெளியாகும்.
இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கானை வைத்து புதிய படம் ஒன்றை லோகேஷ் இயக்கவுள்ளாராம். இப்படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரபாஸ் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவிருந்தாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தில் அவருக்கு பதில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்க லோகேஷிடம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒப்பந்தங்கள் கூட கையெழுத்திடப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதற்கு பாலிவுட் வட்டாரங்களில் உள்ள சில சினிமா விமர்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளது.