குறுகிய காலத்தில் உச்ச நடிகர்களை இயக்கி அதை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். எந்த இயக்குநர்களிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் குறும்படம் மூலம் இயக்கத்தைக் கற்று கொண்டு, அதன் அனுபவத்தை வைத்து முதல் படமாக மாநகரம் படத்தை இயக்கியிருந்தார். ஹைப்பர் லிங்க் திரைக்கதையில் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் பலரது கவனத்தை பெற்றது. இப்படம் இந்தியில் மும்பைக்கார் என்ற தலைப்பில் கடந்த ஆண்டு வெளியானதும் அதில் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இதனிடையே அவர் இயக்கிய ‘களம்’ குறும்படம் ஆந்தாலஜி ஜானரில் 2016அம் ஆண்டு வெளியான அவியல் படத்தில் ஒரு பங்காக இடம்பெற்றது நினைவுகூரத்தக்கது.
இதையடுத்து பெரிய ஹீரோவான கார்த்தியை வைத்து கைதி படத்தை எடுத்திருந்தார். இதில் கதாநாயகி இல்லாமல், பாடல்கள் இல்லாமல் ஒரே இரவில் நடக்கும் கதையை முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த எமோஷனல் ட்ராமாவாக எடுத்திருந்தார். பாடல்கள் இல்லை என்ற குறையை படத்தின் இரண்டாம் பாதியில் 90-களில் வெளியான பாடல்களை பயன்படுத்தி தீர்த்திருப்பார். அது ரசிகர்கள் மத்தியில் அதிரி புதிரி ஹிட்டடிக்க, பின் நாட்களில் அதையே தனது அடுத்தடுத்த படங்களில் பின் பற்றினார். அதுவே பின்பு ட்ரெண்டாக மாறியது. இதன் நீட்சியாக சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குணா பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடல் இடம்பெற்ற காட்சி சிலாகித்து பேசும் அளவிற்கு பிரபலமாகிவிட்டது. ரெட்ரோ பாடல்களை இப்போது வெளியாகும் படத்தில் பயன்படுத்துவது ஒரு வெற்றி ஃபார்முலா போல் பார்க்கப்படுகிறது. கைதி படமும் இந்தியில் போலா என்ற தலைப்பில் ரீமேக்கானது. அஜய் தேவ்கன் இயக்கி நடித்திருந்தார்.
இரண்டு படங்களை அடுத்து மூன்றாவது முறையாக உச்ச நடிகரான விஜய்யை வைத்து. மாஸ்டர் என்ற தலைப்பில் உருவான இப்படம் கொரோனா சிக்கலால் சற்று தாமதமாகவே வெளியானது. இதிலும் 50 சதவீதம் என்னுடைய ஸ்டைல் மற்றும் 50 சதவீதம் விஜய்யின் ஸ்டைல் என்ற பிராண்டோடு வந்தது. விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட அதிக முக்கியத்துவம், அதிக வன்முறை என கலவையான விமர்சனத்தை பெற்றாலும், கொரோனாவுக்கு பிறகு ரிலீசாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து அவரது ஃபேவரிட் கதாநாயகரான கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விக்ரம் என்ற தலைப்பில் கமல்ஹாசனே 1986ல் படம் நடித்த நிலையில் அதே தலைப்பில் ஃபேன் பாய் படமாக இப்படத்தை இயக்கினார். வழக்கமாக அவரது ஸ்டைலான ஆக்ஷன் கலந்து, ரெட்ரோ பாடல்களைப் பயன்படுத்தி படம் உருவாகியிருந்தாலும் பழைய விக்ரம் படத்தின் கனெக்ட், அந்த படத்தையும் கைதி படத்தின் கதாபாத்திரத்தின் கதைக்களத்தை மற்றும் கதாபாத்திரங்களை வைத்து ஒரு யூனிவர்ஸ் உருவாக்கியது, ட்ரெண்ட் செட்டாக அமைந்தது. இதன் பின்பு ரசிகர்கள் அந்த முயற்சியை எல்.சி.யு (லோகேஷ் சினிமெட்டிக் யூனிவர்ஸ்) என அழைத்து வருகின்றனர். இந்த தாக்கம் மற்ற படங்களிலும் எதிரொலித்தது.
இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் கூட்டணி, அனிருத் இசை என பெரிய எதிர்பார்ப்புடன் லியோ படம் உருவாகி வந்த நிலையில் இப்படம் எல்.சி.யூ-வில் வருமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியாகவே இருந்து வந்தது. அந்த சஸ்பென்ஸை பட வெளியீட்டிற்கு முன்பு வரை காத்த படக்குழு, படத்தின் சின்ன கனெக்ட் மூலம் யுனிவர்ஸில் இணைத்து முடித்திருந்தது. இப்படம் இரண்டாம் பாகம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜய்யின் அரசியல் முடிவால் இதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
தொடர்ந்து தனது சினிமா கிராஃபை உயர்த்திக் கொண்டு வந்த லோகேஷ் கனகராஜ், அடுத்து கைகோர்த்துள்ள நடிகர் ரஜினிகாந்த். ரஜினியின் 171ஆவது படத்தை இயக்கவுள்ள அவர், அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் பிஸியாகவுள்ளார். ஏப்ரலில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரகளான ரஜினி, கமல், விஜய் என அடுத்தடுத்து பயணித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அவருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். .