லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் நாளை (19.10.2023) வெளியாகிறது.
இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதையடுத்து 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 சிறப்புக் காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கியது. அதன்படி காலை 9 மணி முதல் காட்சிகள் தொடங்கப்படுகிறது.
இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கி முதல் நாள் முழுவதும் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். இசை வெளியீட்டு விழா ரத்தானது குறித்து பேசிய அவர், "நாங்கள் கணக்கு போட்டு பார்த்ததில் எங்களுக்கு மட்டுமே கிட்டத்தட்ட 12 ஆயிரம் டிக்கெட்டுகள் தேவைப்பட்டது. ஆனால் இருக்கைகள் 6 ஆயிரம் தான் இருக்கிறது. இது நாங்கள் இசை வெளியீட்டு விழா பணிகளை தொடங்கிய பின்பு தெரியவந்தது. அதன்பிறகு கிட்டத்தட்ட 70 முதல் 80 ஆயிரம் பேர் வரை அங்கு கூடவுள்ளதாகத் தெரியவந்தது.
டிக்கெட் கொடுத்து உள்ளே போகிறபோதே என்ன நடந்தது என்பதை வேறொரு நிகழ்ச்சியில் நாம் பார்த்தோம். ஆனால் இலவச பாஸ் என்றபோது எப்படி கூட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போகிறோம் என்பது கேள்வியாக இருந்தது. அதில் எந்த பிரச்சனை நடந்தாலும் அது ஒரு அவப்பெயராக படத்திற்கு மாறிவிடும். அதனால் தான் இசை வெளியீட்டு விழா நடத்தாமல் போனது. அதைத் தாண்டி படத்தை சரியாக வெளியிட வேண்டுமா அல்லது வேறேதாவது நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா என பார்த்தபோது படத்தை தரமாக உருவாக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாக இருந்தது. மேலும் துபாய், மலேசியா போன்ற இடத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். இது எதுக்குமே போகாமல் இருந்ததற்கு முழு காரணம், பட பணிகளை முடிக்க வேண்டும். ப்ரோமோஷன் பணிகளை பிறகு பார்த்து கொள்ளலாம் என முடிவெடுத்து பண்ணினது தான். இன்றைய தேதிக்கு படத்திற்கான விளம்பரம் போதுமானது என நினைக்கிறேன்" என்றார்.
மேலும் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை அடித்து சேதப்படுத்தியதை மேற்கோள்காட்டிய லோகேஷ் கனகராஜ், "ஒரு திரையரங்கில் இத்தனை பேர் தான் இருக்க வேண்டும் என்ற கணக்கின்படி அனுமதிக்காமல் அதிகமாக அனுமதித்தால் இதுபோன்ற கலவரங்கள் ஏற்படும். அதுவும் ஆடியோ லான்ச் நடத்தாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம்" என்றார்.
பின்பு ட்ரைலரில் வரும் வசனம் சர்ச்சையானது குறித்து பேசியபோது, "ட்ரைலரில் வரும் வசனம் விமர்சனத்துக்குள்ளாகும் என்று தெரியும். ஆனால் அவர் அதில் ஈடுபட மாட்டார். அந்த வசனத்தை பார்த்தவுடன் இது வேண்டாம் என என்னிடம் சொல்வதற்கு எவ்ளோ நேரம் ஆகப்போகிறது. ஆனால் அதை அவர் பண்ணமாட்டார். கேட்டால் அது இயக்குநருடைய விருப்பம் நம்மால் எதுவும் செய்ய முடியாது என சொல்வார். இரண்டு பட அனுபவமாக நான்கு வருஷத்தில் சீன் பேப்பரை வாங்கி இதை இப்படி செய்யலாமா என கேட்டதே இல்லை. ஆனால் அந்த காட்சியின் போது என்னிடம் வந்து, இதை பேசலாமா அல்லது தவிர்க்கலாமா என கேட்டார். அப்போது நான் சொன்னது தான் அந்த கதாபாத்திரத்திற்கு அது தேவை என பேச வைத்தேன். அதற்கான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். அதேசமயம் ஒரு யதார்த்தமான வெளிப்படையாக ஒரு கதையை எடுக்கும் போது இதை தவிர்க்க முடியாது" என்றார். இதனிடையே "பிளாக்கில் டிக்கெட் வாங்க வேண்டாம். பொழுதுபோக்கு அம்சத்துக்காக இந்தளவு முக்கியத்துவம் தேவையில்லை. படத்தை படமாக பாருங்கள்" எனவும் கூறியுள்ளார்.