லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ரிலீஸாகும் முன்பே சில சர்ச்சையில் படக்குழு சிக்கியுள்ளது. இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு, பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையாகி, அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து வெளியான ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் ஒன்று பலரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சென்னையில் ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை உடைத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழு தற்போது ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், லியோ படக்குழு படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட்டை சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அன்பெனும்...' எனும் பாடல் நாளை வெளியாகவுள்ளதாகத் தெரிவித்து ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது. அதில் விஜய் த்ரிஷா மற்றும் ஒரு குழந்தை இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் அவர்களின் காதல் மற்றும் குடும்பத்தை விவரிக்கும் பாடலாக இருக்கலாம்.