Skip to main content

‘லியோ’ வெற்றி விழா - விஜய் மக்கள் இயக்கம் போட்ட ரூல்ஸ்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

leo success meet update

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

 

லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் 7 நாளில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்தது.

 

இந்த வெற்றியைக் கொண்டாட நவம்பர் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா நடத்த படக்குழு திட்டமிட்டு, இது தொடர்பாகத் தயாரிப்பாளர் லலித் குமார், பெரியமேடு காவல் நிலையத்தில் பாதுகாப்புக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தார். இந்த விழாவில் விஜய்யும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்திற்கு போலீஸ் தரப்பில், விழாவில் முக்கிய பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள், மொத்தம் எத்தனை நபர்கள் வருகிறார்கள் எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பி பதில் கடிதம் அனுப்பியது. 

 

பின்பு பரிசீலனை செய்து பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அந்த நிபந்தனைகளில் 200 - 300 கார்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதித்தும், பேருந்துகளில் வர அனுமதி மறுக்கப்பட்டும், சரியான எண்ணிக்கையின் அடிப்படையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டியும் நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் முடிக்க அறிவுறுத்தியும் உள்ளது. 

 

இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் நிகழ்ச்சி டேக்குடன் சேர்த்து ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டுமென்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு வந்தால் அது பறிமுதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ரசிகர்கள் வரும்படி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்