லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. உலகம் முழுவதும், முதல் 7 நாட்களில் ரூ.461 கோடியும் 12 நாட்களில் ரூ.540 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்தது.
இப்படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொள்கிறார்கள். ஒவ்வொருவராக அரங்கத்திற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை இந்த விழாவிற்கு அனுமதித்த நிலையில், நிகழ்ச்சிக்கு டேக் மற்றும் ஆதார் அட்டை மூலம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்ட ரசிகர்களை மட்டுமே உள்ளே அனுமதித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் உள்ளே விடும்படி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது டேக்கை உள்ளே அவரது நண்பர் வைத்திருப்பதாகவும், வெளியே அந்த நண்பரை விட மறுத்துவிட்டதாகவும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். மேலும் விஐபி பாஸ் வாங்கிய சில பெண்களை உள்ளே அனுமதிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்ததாக புலம்பியுள்ளனர். அவர்களும் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.