தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்த லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்கி வருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் எனப் பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கோவையில் ஒரு கல்லூரி நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த லோகேஷ் கனகராஜ், மாணவர்களுக்கு நன்கு படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்பு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "இரும்புக் கை மாயாவி தான் என்னுடைய ட்ரீம் ப்ரொஜெக்ட். 10 வருஷமாக எழுதினேன். அடுத்ததாக ஒரு பெரிய படம் பண்ண போறேன். அது கண்டிப்பாக பெரிய சர்ப்ரைஸாக இருக்கும். அது முடித்துவிட்டு கைதி 2 இயக்கவுள்ளேன். லியோ படத்தின் செகென்ட் சிங்கிள் லேட்டாக வெளியாகும் என நினைக்கிறன். வழக்கம் போல் பார்க்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் போன்ற படமே கிடையாது. கைதி மாதிரியான படம். இப்படத்தில் த்ரிஷாவுக்கு எதுவும் ஆகாது" என்றார்.