ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” என பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், ரஜினி, “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என விளக்கம் அளித்திருந்தார்.
இதனிடையே இப்படத்தில் 7ஆம் அறிவு, ராஜா ராணி, உள்ளிட்ட சில படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணன் நடித்துள்ளார். இவர், 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது தமிழர்கள் குறித்து பதிவிட்ட ஸ்க்ரீன் ஷாட் ஒன்று பலராலும் பகிரப்பட்டு தமிழர்களை இழிவு படுத்தி கருத்து தெரிவித்த தன்யாவுக்கு எப்படி இப்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக கடும் விமர்சனம் எழுந்தது. பின்பு அவரே, “தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல” என தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார்.
இப்படி சில சர்ச்சைகளில் படம் சிக்கி வந்த நிலையில் இன்னொரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குவைத் நாட்டில் இப்படத்தில் விளையாட்டு தொடர்பான மத அரசியல் பேசப்பட்டுவுள்ளதாக தெரிவித்து படத்தை வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.