லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ படம் இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகியுள்ளது.
முதல் நாளான இன்று வழக்கம் போல் திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி, பேனர் வைத்து, மேளதாளத்துடன் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் காலை 4 மணிக்கே சிறப்புக் காட்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தமிழக அரசு உத்தரவின்படி 9 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திரையரங்கில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதிகளிலும் வித்தியாசமான முறையில் ரசிகர்கள் படத்தை வரவேற்று வரும் நிலையில், புதுக்கோட்டையில் ஒரு தம்பதி திரையரங்கினுள் நிச்சயம் செய்துகொண்ட சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் 20 அடி நீள கேக், பிரியாணி விருந்து என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ், அனிருத், மன்சூர் அலிகான், கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, வைபவ், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ரசிகர்களுடன் திரையரங்கிற்கு வந்து படத்தை பார்த்து ரசித்தனர். இதனிடையே கேரளாவில் பெண்களுக்கென தனி பிரத்யேக காட்சியும் திரையிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த படம் வெளியானது குறித்து செய்தியாளர்களின் சந்திப்பில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், "கடந்த 1 வாரமாக லியோ லியோ லியோ-னு திமுகவினர் படக்குழுவை பாடாய்ப்படுத்திவிட்டனர். கடைசியாக அத்தனை தடைகளையும் மீறி படம் வெளியாகியிருக்கிறது. படத் தயாரிப்பாளருக்கும் படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 மணிக்கு சிறப்புக் காட்சி கேட்டு தமிழக அரசிடம் படக்குழு கோரிக்கை வாய்த்த நிலையில் அது மறுக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.