90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 2010 ஆம் ஆண்டில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி தற்போது வரை அதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆரம்பத்தில் திமுகவில் இருந்த குஷ்பு பின்பு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். இப்போது பாஜகவில் செயல்பட்டு வருகிறார். மேலும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த அவர், அண்மையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தாங்கள் பயின்ற ஆசிரியர்களை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எப்போதுமே ட்விட்டரில் தீவிரமாக இயங்கி வரும் குஷ்பு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது அரசியல் ஆசானான முன்னாள் முதலமைச்சர் கலைஞரை நினைவுபடுத்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியல் பள்ளியில் எனது முதல் நாள். என் விருப்பமான ஆசிரியரை இனிய நினைவுகளுடன் நினைவு கூருகிறேன்” என்று கலைஞருடன் நின்று கொண்டிருக்கிற படத்தைப் பகிர்ந்துள்ளார். தீவிரமான பாஜக அரசியலில் இருந்து கொண்டு தொடர்ச்சியாக கலைஞரை நினைவுபடுத்தி பதிவிடுவதை குஷ்பு வழக்கமாகவும் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.