90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ, 2010ஆம் ஆண்டில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி தற்போது வரை அதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆரம்பத்தில் திமுகவில் இருந்த குஷ்பூ பின்பு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். இப்போது பாஜகவில் செயல்பட்டு வருகிறார். மேலும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த இவர் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நிகழ்ச்சில் ஒன்றில் பேசிய குஷ்பூ தனக்கு 8 வயது இருக்கும் போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஒரு குழந்தைக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அது அதன் வாழ்நாள் முழுவதும் ஒரு வடுவாக ஆறாமல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அப்படித் தான் இருக்கும். அதில் இருந்து நிறைய பேர் வெளிவருவதில்லை.
எனது அம்மாவிற்கு மோசமான கணவர் தான் அமைந்தார். அம்மாவை அடிப்பது, எங்களை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார். தனது சொந்த குழந்தையையே பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இவை அனைத்தும் செய்வது தனது பிறப்புரிமை போல் நினைத்து கொண்டார். எனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஆரம்பித்தது எனது 8 வயதில் இருந்து. அதை வெளியில் சொல்லும் தைரியம் எனது 15 வயதில் தான் உருவானது. அந்த சமயத்தில் அவருக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற முடிவெடுத்த போது, நான் வெளியில் சொல்வதனால் அம்மா மற்றும் மூன்று சகோதரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது.
நான் சொல்வதை அம்மா நம்பவில்லை. ஏனென்றால் அம்மா அப்பா தான் எல்லாமே என்ற மனப்பான்மையில் இருந்தார். அதனால் 15 வயதில் இனியும் பொறுக்க முடியாது என துணிச்சலாக முடிவெடுத்து அவருக்கு எதிராகப் பேசத் தொடங்கினேன். பின்பு எனக்கு 16 வயது முடிவதற்குள் எங்களை விட்டு அவர் பிரிந்து சென்றார். அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் என்று கூட தெரியாமல் இருந்தோம். ஒரு கட்டத்தில் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற மன தைரியத்தோடு போராட வேண்டும் என்ற மனப்பான்மை எனக்கு வந்தது. குடும்பத்தில் இருப்பவரையே எதிர்க்க துணிச்சல் பெற்றதினால் தான் இன்று எது நடந்தாலும் அதை எதிர்கொள்கிற தைரியம் எனக்குள் வந்தது என்று நினைக்கிறேன்" என்றார்.