ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் ஸ்ரீ கணேஷை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் குருதி ஆட்டம் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
வன்முறை நிறைந்த படம் பண்ண வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல. நான் வன்முறைகளை ஆதரிக்கக்கூடிய ஆளும் அல்ல. குருதி ஆட்டம் பார்த்த பிறகு ஒரு எமோஜனல் எக்ஸ்பீரியன்ஸோடுதான் எல்லோரும் வெளியே வருவார்கள் என்று நம்புகிறேன். நாம் எல்லோருமே வேட்டைச் சமூகமாக இருந்தவர்கள். அதனால் வன்முறை என்பது நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. உலகத்தில் எந்த நாட்டு சிறந்த படத்தையும், அதிக வசூல் செய்த படத்தையும் எடுத்துப் பார்த்தால் அது ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும்.
குருதி ஆட்டம் படத்திற்காக 4 ஆண்டுகள் காத்திருந்தது ஒரு மனிதராக என்னை பல விதங்களில் பக்குவப்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தை விட்டு போய்விடுவோம் என்று ஏதாவது ஒரு தருணத்தில் நினைத்திருந்தால்கூட இந்தப் படம் இன்றைக்கு ரிலீஸ் வரைக்கும் வந்திருக்காது. அதர்வா கேரியரில் மிக முக்கியமான படமாக குருதி ஆட்டம் இருக்கும் என்று நம்புகிறேன்.
நான் மதுரைக்காரன் கிடையாது. வெளி ஆளாக இருந்துதான் மதுரையை பார்த்திருக்கிறேன். இந்தக் கதைக்காக மதுரையில் நிறைய ட்ராவல் பண்ணேன். படத்தின் அவுட் பார்க்கும்போது மதுரையை நல்லா காட்டியிருக்கிறோம் என்ற திருப்தி வந்தது. படத்தில் ராதிகா, ராதா ரவி சிறப்பாக நடித்துள்ளனர். ராதா ரவி சார் ஷூட்டிங் முடிந்த பிறகும் கூட அடிக்கடி போன் செய்து இப்ப என்ன வேலை போய்கிட்டு இருக்கு என்று விசாரித்துக்கொண்டே இருப்பார்.
நான் யுவன் சங்கர் ராஜாவின் பெரிய ரசிகர். அவருடைய இசையும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். அவருடன் பேசிய கொஞ்ச நேரத்திலேயே என்னுடைய எதிர்பார்ப்பு என்ன, கவிதைகள், வரிகள் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்டார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நண்பர் என்பதே எனக்கு பெருமையாக உள்ளது. வாய்ப்பு தேடிய காலத்தில் இருவரும் நிறைய பேசியிருக்கோம். அவர் கமல் சாரின் எவ்வளவு பெரிய ரசிகர் என்பது எனக்குத் தெரியும். இன்றைக்கு அவரை வைத்தே படம் இயக்குகிறார் என்பதைப் பார்க்க ரொம்பவும் சந்தோசமாக உள்ளது. ஒருமுறை லோகேஷ் ஒரு கதையைச் சொல்லி இதை ஃபகத் ஃபாசில் பண்ணா நல்லா இருக்கும் என்று சொன்னார். நம்மலாம் கேரளா போய் ஃபகத் ஃபாசில பார்க்ககூட முடியாதுனு கிண்டலாக சொன்னோம். ஆனால், இன்றைக்கு ஃபகத் ஃபாசிலையும் இயக்கிவிட்டார்.