18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பேரணியில், இந்தியா கூட்டணி தலைவர்கள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.
நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோயில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் முகலாயர்களைப் போலவே சாவான் மாத வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்” என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் ராகுல் காந்தியும் லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவரது கட்சியினரும், நம்முடைய பணத்தில் சாப்பிட்டுவிட்டு, யாரோ சாப்பிட்ட இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அவருக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது?
முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவாக கிஷோர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.