Skip to main content

தி கேரளா ஸ்டோரி - பாஜகவின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

The Kerala Story declared tax free in Madhya Pradesh

 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக காட்சி இடம்பெற்றது. மத வெறுப்பை தூண்டும் வகையில் படம் இருப்பதாக பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. 

 

இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த நிலையில் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நேற்று (05.05.2023) இப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் இப்படம் வெளியான திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தீவிர சோதனைக்கு பிறகு தான் பார்வையாளர்கள் உள்ளே அனுப்பப்படுகின்றனர். ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு கலவையான விமர்சனமே பெற்று வருகிறது. நேற்று முதல் நாளில் இப்படம் இந்தியா முழுவதும் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

இந்நிலையில் பாஜக ஆட்சியில் இருக்கும் மத்தியப்பிரதேசத்தில் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கும்படி பாஜகவினரும் இந்து அமைப்புகளும் அம்மாநில முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்ற மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இப்படத்திற்கு அம்மாநிலத்தில் வரிவிலக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இப்படம் பயங்கரவாதத்தின் கொடூரமான உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறது. மதமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அதனால் மத்தியப்பிரதேச அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கிறது” என பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்