‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கியிருந்தார். அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘கைதி’ படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராகவுள்ளது.
இதனிடையே கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் சஞ்சன் கைதி படத்தின் கதை என்னுடையது என்று கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த 2000ஆம் ஆண்டு சென்னை புழல் சிறையில் தண்டை கைதியாக இருந்த போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதையாக எழுதியதாகவும், அதை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவிடம் கொடுத்தாகவும் தெரிவித்த ராஜிவ் சஞ்சன் என் கதையை எனக்கு தெரியாமல் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைதி படமாக உருவாகியுள்ளது என குற்றம் சாட்டினார்.
மேலும் அதற்கு நஷ்ட ஈடாக 4 கோடி தர வேண்டும் என்றும், படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும், இரண்டாம் பாகம் எடுக்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரினர். இதனைத்தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி 'கைதி' படத்தை ரீமேக் செய்வதற்கும், இரண்டாம் பாகம் எடுப்பதற்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு கேரள நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.