மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி, வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான 'மாமன்னன்', வெற்றிகரமாக 50 நாளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலு, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
அமைச்சர் உதயநிதி பேசுகையில், அனைத்து படக் குழுவினர்களையும் பாராட்டினார். பின்னர், படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சம்பவங்களை விவரித்தார். ஏ.ஆர். ரஹ்மானின் முக்கியத்துவம் குறித்தும் மாரி செல்வராஜ் இந்த படத்திற்கு செலவிட்ட உழைப்பையும் பற்றி பேசினார். வடிவேலு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் படத்தை எடுக்க வேண்டாம் என நினைத்ததாகவும் பகிர்ந்தார். கீர்த்தி சுரேஷுடன் பணியாற்றிய தருணங்கள், அங்கு நடந்த நகைச்சுவை சம்பவங்களையும் நகைப்புடன் கூறினார். மாமன்னனின் முக்கியத்துவம் படம் பாதிவரை முடிவடைந்து, அதனை திரையிட்டுப் பார்த்த பின்பே உணர்ந்தேன். பின்பு முழுவதுமாக ஈடுபாடு காட்டினேன் எனவும் கூறினார். அடுத்த படமும் இதேபோல் வெற்றியடையும் என வர்ணனையாளர் கூற, " இல்லை. இதுவே எனது இறுதிப் படம்" என தெரிவித்தார். முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றி பெற்றது போல இறுதிப் படமான மாமன்னனும் வெற்றியானது மகிழ்வை அளிப்பதாகக் கூறினார்.
கீர்த்தி சுரேஷ், "நான் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் தான் காரணம். பல வருடங்களுக்கு முன் திரைப்படங்கள் வெளியாகி 150, 200 நாட்கள் என எளிதாக எட்டும். ஆனால் இன்றைய சூழலில் 50 வது நாள் என்பது மிகவும் கடினமாக எட்டக் கூடியதாக உள்ளது. இந்தப் படத்தில் பயணித்ததது நிறைய நீங்கா நினைவுகளைத் தந்துள்ளது. வடிவேலுவுடன், நான் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. தான் சொன்னது போல வடிவேலுவின் உணர்வுப் பூர்வமான காட்சிகள் பார்வையாளர்களை கலங்க வைத்தது" என்றார்.