
உலகில் உள்ள அதிகம்பேரால் விரும்பப்படும் நடிகை விருதினை தொடர்ந்து மூன்று பெற்று ஹார்ட்ரிக் சாதனை படைத்தவர் ஹிந்தி நடிகை கத்ரீனா கைப். ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டைகர் ஜிந்தா ஹை மாபெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து நடிகர் ஷாருக்கானுடன் ஒரு புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கும் அவர் தற்போது இந்திய பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் ‘எஜுகேட் கேர்ள்’ என்ற அமைப்பின் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த அமைப்பை பற்றியும், பெண்களின் கல்வி முன்னேற்றத்தை பற்றியும் நடிகை கத்ரீனா பேசியபோது... "கிராமபுறத்து பெண்களும், ஆதிவாசி பெண் குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதிலும், உயர்கல்வி பெறுவதிலும் இன்னும் தடை உள்ளது. பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிற்கும் பெண்களை மீண்டும் அதில் சேர்த்து படிக்க வைப்பதற்கான பணியை இந்த அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் தரமான கல்வியை பெற வேண்டும். இதற்கு உழைப்பதற்காகவே இந்த பணியில் என்னை நான் இணைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.