முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்த 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' கடந்த ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. கதாநாயகியாக சித்தி இட்னானி நடிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். ஆர்யாவின் 34வது படமாக வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இந்நிலையில் இப்படம் வருகிற 7 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது குறித்து இயக்குநர் முத்தையா கூறியது, "இப்படம் காதல், தியாகம், மீண்டெழும் திறனாற்றல் ஆகிய உணர்வுகளை ஆராயும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதை. தாங்கள் வழக்கமாக பின்பற்றி வரும் மதக் கோட்பாடுகளை பார்வையாளர்கள் மாற்றியமைக்க வேண்டிய இடையறாத தேவை இப்போது இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, சமூக - மதக் கோட்பாடுகளைத் தகர்த்தெறியும் ஒரு திரைப்படமாக இதை உருவாக்கியிருக்கும் அதே வேளையில் எனது பார்வையாளர்களுக்கான உணர்ச்சிகரமான அடிதடி நிறைந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் உருவாக்கவும் நாங்கள் கடும் முயற்சி எடுத்துள்ளோம். பெரிய திரையில் இதை ஒரு வெற்றிப்படமாக உருவாக்க உதவிய ஒரு மிகப்பெரிய திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் டிஜிட்டல் தளத்திலும் இந்தப் படம் ஒரு மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.
ஆர்யா கூறுகையில், "காதர் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியது என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அனுபவமாக அமைந்தது. அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அனைவரும் எங்கள் படத்தைக் காண வேண்டும் என்றும், காதரின் தடுமாற்றமில்லாத அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் நீதிக்கான அவரது தேடலில் இருந்து அவர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.