லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ரிலீஸாகும் முன்பே சில சர்ச்சையில் படக்குழு சிக்கியுள்ளது. இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு, பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையாகி, அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து வெளியான ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் ஒன்று பலரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சென்னையில் ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை உடைத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, "தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தைகளும் கொச்சை வார்த்தைகளும் வருவது இது முதல் முறை அல்ல. ஆனால் யாருமே பார்க்காத படத்தில் யாரோ சொன்ன வார்த்தைக்கும் இந்தியா முழுவதும் ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் பேசியதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. எல்லாருக்கும் ஒரே நியாயம் கிடையாது. யாரோ ஒரு முகம் தெரியாத நபர் என்னை திட்டுவதற்கும் என்னை நல்லா தெரிந்தவர்கள் பேசுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கு. அதில் என்ன பிரச்சனை என்றால் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள், ஏ சான்றிதழ் பெற்ற படத்தில் பேசினால், அது ஒரு சாரார் படம் என புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு குழந்தைகள், அதாவது 18 வயது நிறையாதவர்கள் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவர்களை விட இளைஞர்கள் நம்ம தளபதி சொல்லிவிட்டார் என சாதாரணமாக பேச தொடங்கிவிட்டால் அது நல்லது இல்லை. இதை அஜித்தும் மங்காத்தா படத்தில் செய்துள்ளார். இப்போது லியோவில் விஜய் பேசியது படத்தில் இடம்பெறாது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் இந்த வசனத்தை சொல்ல வைத்ததாக சொல்லியுள்ளார். இது கவனம் ஈர்ப்பதற்காகவும் இருக்க முடியாது. விஜய் படத்துக்கு அது அவசியமில்லை. அந்த காட்சியில் அந்த வசனத்தை பேசினால் தான் அந்த உக்கிரம் வரும் என்று சொன்னால் அந்த இடத்தில் இயக்குநரின் தோல்வியாகத் தான் பார்க்க வேண்டும்" என்றார்.