அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புபடுத்திப் பேசியிருந்தார். மேலும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த த்ரிஷா, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். இதையடுத்து முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதனிடையே த்ரிஷாவிற்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால், தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர். இதையடுத்து ஏ.வி ராஜுக்கு த்ரிஷா தரப்பில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து கருணாஸ், தன் மீது வன்மம் கொண்டு அவதூறு மற்றும் அருவருக்கத்தக்க வகையில் பொய்யான தகவலை பரப்பி வந்த அரசியல் கட்சி சார்ந்த ஏ.வி ராஜூ மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளார். யூடியூப் சானலில் தவறான தகவலை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சானல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷ்னரிடம் கருணாஸ் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர். உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். எந்த ஆதாரமும் இன்றி பரப்பப்படும் பொய்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் விளம்பரத்துக்காக பொய்யான செய்திகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.