கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் ரஜினி, படக்குழுவை பாராட்டி அறிக்கை வெளியிட்டார். மேலும் நேரில் அழைத்து பாராட்டினார். இவரை தவிர்த்து ஷங்கர், சிம்பு, மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர். அப்போது மேடையில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், “என்னுடைய படம் தியேட்டருக்கு வந்து நாலரை வருஷம் ஆச்சு. அந்த இடைவெளி, ரொம்ப மன அழுத்தமா இருந்துச்சு. பேட்ட ரிலீஸாகி முடியும்போது, நம்ம படத்தை இனி தியேட்டர்ல பார்ப்போமான்னு நினச்சு கூட பார்க்கல. அந்தளவுக்கு டார்ச்சர் வரும்னு நினைக்கல. அந்த விஷயங்கள் ஹர்ட் பன்னிக்கிட்டே இருந்துச்சு. ஆனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தியேட்டருக்கு வரும்போது, இதுதான் நம்ம தியேட்டருக்கு வர சரியான கம் பேக் படமாக இருக்குமென நினைச்சேன். பீட்சா படம் வெளியாகும்போது என்ன ஃபீல் இருந்துச்சோ அது மாதிரி தான் இந்த படத்திற்கும் இருந்துச்சு.
அதற்கு இண்டஸ்டிரியில் நிறைய பேர் சப்போர்ட் பண்ணாங்க. படம் ரிலீஸன்று அனிருத் ட்வீட் பண்ணார். குறிப்பாக தனுஷ் சார், படம் பார்த்து படம் ரிலீஸாவதற்கு முந்தன நாள் சூப்பராக இருக்கு என போஸ்ட் போட்டார். எனக்கு போன் பண்ணியும் வாழ்த்தினார். இதேபோல் நிறைய பிரபலங்கள் வாழ்த்து சொன்னார்கள். அதுவும் ரஜினி சார். இதுவரைக்கும் என்னுடைய எல்லா படத்தையும் பார்த்து பாராட்டியிருக்கார். நான் வெறும் அவருடைய ரசிகன் என்பதற்காக மட்டும் பாராட்டுகிற ஆள் அவர் கிடையாது. அந்தந்த படங்களுடைய விஷயங்கள் புரிஞ்சு, அவருக்கு புடிச்சிருச்சுனா உடனே பாராட்டி விடுவார். மெர்க்குரி படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை பார்த்து பாராட்டின ஒரே ஆள் ரஜினிதான். இந்த படத்திற்கு 1 மணி நேரம் எங்களுடன் அவர் பேசியது, என் வாழ்க்கையில் மறக்க முடியாது” என்றார்.