கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி, வெப்பம் என பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்தவர் கார்த்திக் குமார். இவர் வானொலி தொகுப்பாளினியாகவும் பின்னணி பாடகியாகவும் வலம் வந்த சுசித்ராவை 2005ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு பிரிந்தார். அதே ஆண்டு இவரது முன்னாள் மனைவி சுசித்ராவின் எக்ஸ் பக்கத்தில் கோலிவுட் நடிகர்களின் பார்ட்டி செய்யும் புகைப்படங்கள் வெளியாகி, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்பு அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சுசித்ரா தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவ்வப்போது நேர்காணலில் பல்வேறு அதிர்சிக்குள்ளான தகவல்களை பகிர்ந்து வந்த சுசித்ரா, சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது முன்னாள் கணவர் கார்த்திக் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் எனக் கூறியிருந்தார். இது பரபரப்பை உண்டாக்க, தான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதை சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை எனக் கார்த்திக் குமார் தெரிவித்திருந்தார். இதையடுத்து கர்த்திக் குமார் சுசித்ராவிடம் பேசும் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. அதில், "நீ அசிங்கமாக பேசுற, இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பொண்ணு பேசுற பேச்சு” என இடம்பெற்றிருந்தது. இந்த ஆடியோவும் பரவலாக பகிரப்பட்டு, கடும் விமர்சனங்களை கிளப்பியது. பலரும் கார்த்திக்கின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து அந்த ஆடியோ தான் பேசியதில்லை எனக் கார்த்திக் தெரிவித்திருந்தார். இதனிடையே அவர் மீது அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், தேசிய பட்டியலின ஆணை இயக்குநர் ரவிவர்மன் உடனடியாக நடவடிக்கை எடுத்து சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பி.க்கு, 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கடிதம் மூலம் உத்தரவிட்டார். இந்த நிலையில் கார்த்திக் குமார், ஆடியோ விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சுசித்ராவிற்கு கார்த்திக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தன்னைப் பற்றி பொய்யான கருத்து கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். சுசித்ராவின் கருத்துகள் பொய்யானவை. அதை உறுதிப்படுத்தாமல் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலை வெளியிட்டுள்ளனர். அந்த நேர்காணலை சம்பந்தப்பட்ட தனியார் யூடியூப் சேனல் நிர்வாகம் நீக்க வேண்டும், இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.