
கௌதம் மேனன் தயாரிப்பில், 'துருவங்கள் 16' கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'நரகாசுரன்'. அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில், கௌதம் மேனனும், இயக்குனர் கார்த்திக் நரேனும் சில நாட்களாக ட்விட்டரில் மோதிக் கொண்டது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் இப்பிரச்சனைக்கு முடிவுகட்டும் விதமாக இயக்குனர் கௌதம் மேனன் ட்விட்டரில் நீண்ட கடிதத்தை வெளியிட்டார். அதில்...படத்தில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறேன். சிலர் பேச்சை கேட்டு கார்த்திக் நரேனுக்கு கோபம் வந்துள்ளது என்று பதிவிட்டுருந்தார். இந்நிலையில் இந்த அறிக்கைக்கு பின் சில நாட்கள் மவுனம் காத்த கார்த்திக் நரேன் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் மீது மீண்டும் ஒரு புகார் தெரிவித்துள்ளார். அதில்..."கௌதம் மேனன் சினிமா துறையில் மூத்தவர். அவர் தயாரிக்கும் துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களின் பட்ஜெட் நரகாசுரனை விட பல மடங்கு அதிகம் என்பது உண்மைதான். 'நரகாசுரன்' படத்துக்கு பணம் வாங்கி அதை துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்கு முதலீடு செய்யவில்லை என்று கௌதம் மேனன் கூறியிருப்பதில் உண்மை இல்லை. என்னிடம் ஆதாரம் இருக்கிறது. எனது படத்தை காட்டி அவர் யாரிடம் பணம் வாங்கினார் என்பது எனக்கு தெரியும். கௌதம் மேனனுக்கு பணம் கொடுத்தவர் கோர்ட்டில் நரகாசுரன் படத்துக்கு எதிராக தடை வாங்கி விட்டார். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களை அவர் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.