நடிகர் கார்த்தி, உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பினைத் தொடங்கி, விவசாயிகளுக்கு உதவி வருகிறார். தற்போது, டெல்லியில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தினை நடத்தி வரும் நிலையில், அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தி அந்த அறிக்கையில், " நாளும் நம் பசி தீர்க்க, பாடுபடும் இந்தியநாட்டின் உழவர்கள், பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும், கரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் ' உழவர்' என்ற ஒற்றை அடையாளத்துடன் போராடிவருகின்றனர். விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும்பங்கு என்ற வகையில் பெண்களும் பெருந்திரளாகப் பங்கெடுத்து போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது" என கூறியுள்ளார்.
Let’s not forget our farmers!#FarmersProtest pic.twitter.com/m5sqnkf9HD
— Actor Karthi (@Karthi_Offl) December 3, 2020
நாளும், பொழுதும் பாடுபட்டால்தான் வாழ்க்கை என்ற நிலையில், தொலைதூரம் பயணித்து வந்து தீரத்துடன் போராடி வரும் செய்திகள், நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது என குறிப்பிட்டுள்ள கார்த்தி, இயற்கை சீற்றங்கள், விளைபொருட்களுக்கு உரியவிலை இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் உழவர் சமூகம், வேளாண் சட்டங்களால் மேலும் பாதிப்படைவோம் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் மண்ணில் தங்களுக்கிருக்கும் உரிமையும், தங்கள் விளைப்பொருட்களின் மேல் தங்களுக்கிருக்கும் சந்தை அதிகாரமும், பெரும் முதலாளிகளுக்கு இந்த சட்டங்களால் சென்று விடும் என்பதால் , இந்த புதிய வேளாண் சட்டங்களை விலக்கிகொள்ள வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், "போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்த்து, அவர்கள் கோரிக்கையை பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு! அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.