முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசுகையில், “பருத்தி வீரன் படம் மூலம் என்னுடைய சினிமா பயணம் இந்த மண்ணில்தான் ஆரம்பித்தது. கிராமத்துப் படங்கள் ஏன் முக்கியம் என்று எல்லோரும் பேசினார்கள். உறவுகளின் முக்கியத்துவத்தைப் பேசும் கிராமத்துப் படங்கள் தொடர்ந்து பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. பருத்தி வீரன் மாதிரியான படம் பண்ணிய பிறகு யார் நம்மை அந்த மண்ணுக்கு மீண்டும் சரியாகக் கொண்டு செல்வார்கள் என்ற பயம் இருந்தது. முத்தையாவிடம் கதை கேட்டபோதுதான் அந்த நம்பிக்கை திரும்ப வந்தது. எல்லோருக்கும் அப்பாதான் ஹீரோ. ஆனால், இந்தப் படத்தில் அப்பாதான் ஹீரோவுக்கு வில்லன். அப்பா கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வடிவுக்கரசி அம்மாவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக இருந்தது. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது. படிப்பு வரவில்லை என்றால்தான் சினிமாவிற்கு வருவார்கள். ஒரு சிலர்தான் நல்லா படித்துவிட்டு சினிமாவிற்கு வருவார்கள். அந்த வகையில், அதிதி டாக்டருக்கு படித்துவிட்டு சினிமாவிற்கு வந்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. படத்திற்கு சிறப்பான இசையைக் கொடுத்த யுவனுக்கு நன்றி. 60 நாட்கள் தங்கியிருந்து இங்கு ஷூட் செய்தோம். அது இந்த ஊரில் வாழ்ந்த திருப்தியைக் கொடுத்தது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெறும்” எனத் தெரிவித்தார்.