மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார்' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர் . இதில் கார்த்தி, இயக்குநர் மித்ரன், ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது கார்த்தி பேசுகையில், "என்னிடம் ஒருவர் சந்தோஷமாக இருக்கிறீர்களா எனக் கேட்டார். நான் நிம்மதியா இருக்கேன் என்றேன். ஏனென்றால் கடின உழைப்பை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறோம். ஒரு குழுவாக அனைவரும் சேர்ந்து உழைக்கிற ஒரு சந்தோஷம் மறுபடி மறுபடி கிடைத்தது பெரிய விஷயமாக பார்க்கிறேன். ஒரு குழுவாக இருப்பது ரொம்ப முக்கியமாக இருக்கிறது. அப்படி குழுவாக இருக்கும்பட்சத்தில் தான் அனைவரும் ஒரு ப்ராஜெக்ட்டிற்காக வேலை செய்வோம்.
இதனை பொன்னியின் செல்வன் படத்திலும் பார்த்தேன். மறுபடியும் சர்தார் படத்திலும் அதை உணர்ந்தேன். இந்த அனுபவத்தை கொடுத்ததற்கு மித்ரன் மற்றும் அவரது நண்பர்களுக்கு நன்றி. இந்தக் கதையைச் சொல்லி சம்மதிக்க வைப்பதும் இதிலிருந்த ஒவ்வொரு விஷயத்தை உருவாக்குவதும் அவ்வளவு ஈசி கிடையாது. அதை நாம் ஈசியாக சொல்லிவிடலாம். ஆனால் எடுப்பது மிக கடினம். அதை மெனக்கெடல்களுடன் படக்குழு உருவாக்கியுள்ளார்கள்.
இந்தப் படத்திற்காக எல்லாரும் தங்களை மெருகேற்றிக் கொண்டோம். இந்த கதைக்களம் அதனை ஏற்படுத்தித் தந்தது. சர்தார் கதாபாத்திரம் நடிக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கும். தியாகம் என்ற வார்த்தை சமீபத்திய படத்தில் நான் கேள்விப்பட்ட மாதிரி எனக்கு நியாபகம் இல்லை. ஒரு நாட்டிற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளார்கள். அதனை மனதில் புரிந்து கொண்டு உள்வாங்கி நடித்தது சுவாரசியமாக இருந்தது.
இங்கு நிறைய மனநிலை கொண்ட மக்கள் இருக்கிறார்கள். அத்தனையும் கருத்தில் கொண்டு படம் எடுக்கிறோம். நல்ல அறிவாளியாக இருக்கும் ரசிகர்களுக்கு மட்டும் சினிமா எடுப்பதில்லை. எல்லாருக்காகவும் எடுக்கிறோம். அதனால் அனைவருக்கும் புரியும்படி சினிமா எடுக்க வேண்டிய அவசியம் இங்கு இருக்கிறது. இது இந்தப் படத்திற்கு பெரிய சவாலாக இருந்தது. அதனை அழகாக செய்த படக்குழுவுக்கு நன்றி.
என் கதாபாத்திரத்திற்கு 3 மணிநேரம் மேக்கப் போடப்பட்டது. ரொம்ப எரியும். கொஞ்சம் கோபமாகவும் இருக்கும். அப்போதெல்லாம், எனக்குள் நானே, நமக்கு முன்னாள் இதை விட பெரிய கஷ்டத்தை நிறைய ஜாம்பவான்கள் அனுபவித்துள்ளார்கள். அதனால் ரொம்ப ஃபீல் பண்ண வேண்டாம் என சமாதானம் செய்து கொள்வேன். இன்றைய தலைமுறையினர், ஸ்பை திரைப்படம் என்றாலே பிரபல ஹாலிவுட் தொடர்கள் மற்றும் படங்களுடன் ஒப்பிடுவார்கள் என தெரியும். அதனால் எங்களால் முடிந்த அளவு முழு உழைப்போடு இந்த படத்தில் செய்திருக்கிறோம்.
படம் எவ்வளவு வசூல் செய்தது என்பதை விட மரியாதை மற்றும் கைதட்டலுக்காகத்தான் ஒவ்வொரு நாளும் உழைக்கிறோம். படத்தில் வரும் அந்த பாட்டில் திறக்கும் காட்சி எல்லோருக்கும் பயத்தைக் கொடுக்கும். அந்த பயத்தில் தான் இரண்டு வருஷமா 10 லிட்டர் கேன் வாங்கி வீட்டிலிருந்து நானே தண்ணீர் எடுத்துட்டு போயிட்டு இருக்கேன். முடிந்த அளவு வெளியில் தண்ணீர் வாங்குவதில்லை. சௌகரியத்தை நோக்கிப் போன நாம மறுபடியும் பழைய ஸ்டைலுக்கு மாறுவது ரொம்ப அவசியமாக நாங்கள் கருதுகிறோம். உங்களுக்கும் அது புரியும் என நினைக்கிறேன்" என்றார்.